Friday, July 18, 2008

தமிழகத்தில் மீண்டும் மின் தடை - அணு மின்சாரம் ஒப்பந்தந்தை எதிர்ப்பவர்கள் கவனத்திற்கு

சென்னை: தமிழகத்தில் நிலவும் பெரும் மின் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக தொழிற்சாலைகளுக்கு மின்சார விடுமுறை அளிக்கும் திட்டத்தை தமிழக அரசு மீண்டும் அமல்படுத்தியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு மின்சாரத் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் தமிழகத்தை பல மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு நாள் தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அளித்து மின் தட்டுப்பாடு சமாளிக்கப்பட்டது. தற்போது மீண்டும் அந்த மின்சார விடுமுறைத் திட்டத்ைத தமிழக அரசு அறிவித்துள்ளது.

இன்று சென்னையில் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தொழிலதிபர்களுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னர் இதை அறிவித்தார்.

1000 மெகாவாட் பற்றாக்குறை:

இதுகுறித்து ஆற்காடு வீராசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை பொய்த்து விட்டதாலும், காற்றாலை மூலம் குறைந்தஅளவிலான மின்சாரமே உற்பத்தி செய்யப்படுவதாலும், 1000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாகியுள்ளது.

இந்த நெருக்கடியை சமாளிக்க தமிழகத்தை ஆறு மண்டலமாக பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திலும் வாரம் ஒருமுறை ஒரு மணி நேரத்திற்கு மின்தடையை அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த மின் விடுமுறையிலிருந்து, விவசாயிகள், குடிநீர் விநியோகம், பால் பண்ணைகள் ஆகியவற்றுக்கு விலக்கு அளிக்கப்படும்.

இரவில் மின் தடை கிடையாது:

மாணவர்களின் நலன்கருதி இரவு நேரங்களில் மின்சாரம் தடை செய்யப்பட மாட்டாது. அதேபோல கிராமங்களுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும்.

காற்றாலை மூலம் 2700 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என அரசு நினைத்திருந்தது. ஆனால் 1800 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.அதேபோல,நீர் மின் நிலையங்களிலும், பருவ மழை பொய்த்ததால் எதிர்பார்த்த மின் உற்பத்தி இல்லை.

மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு 60 சதவீத மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 1000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது. இதே நிலைதான் அண்டை மாநிலங்களிலும் நிலவுகிறது,.

மின்சார விடுமுறை காரணமாக, 375 முதல் 400 மெகாவாட் மின்சாரத்ைத சேமிக்க முடியும். மேலும், தொகுப்பு மின்உற்பத்தி மூலம் 500 மெகாவாட் மின்சாரம் பெறமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநகராட்சிகளில் 1 மணி நேரம் - நகராட்சிகளில் 2 மணி நேரம்:

சென்னை, மதுரை, திருச்சி, கோவை மாநகராட்சிகளில் ஒரு மணி நேர மின்சாரத் தடை அமல்படுத்தப்படும். நகராட்சிகளில் 2 மணி நேர மின் தடை அமல்படுத்தப்படும். இதன் மூலம் 300 மெகாவாட் மின்சாரம் மிச்சப்படுத்தப்படும்.

சென்னை மாநகராட்சி எட்டு மண்டலமாக பிரிக்கப்படும். இதில்தினசரி ஒரு மண்டலத்திற்கு ஒருமணி நேரம் மின்தடை அமல்படுத்தப்படும்.

ஆந்திராவுக்கு தமிழகம் பரவாயில்லை:

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் நிலைமை பரவாயில்லை. ஆந்திராவில், பகல் நேரங்களில் விளக்குகள், மின் விசிறிகள், குளிர்சாதனப் பெட்டிகளை பயன்படுத்த வேண்டாம் என்று அந்த மாநில அரசு சமீபத்தில் கோரிக்ைக விடுத்தது. ஆனால் தமிழகத்தில் அப்படிப்பட்ட நிலை இல்லை.

2009-10ம் ஆண்டு வாக்கில், 5000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று தமிழக அரசு எதிர்பார்க்கிறது.

பர்னஸ் ஆயில் மூலம் மின்சாரம் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு வாட் வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோன்ற சலுகையை டீசலைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும் அளிக்க வேண்டும் என்று தொழிலதிபர்கள் கோரியுள்ளனர். இதுகுறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை.

வரி விலக்கு மூலம் ஏற்படும் இழப்பீட்டை சமாளிக்க இரு தரப்பும் நஷ்டத்ைதப் பகிர்ந்து கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரசு 60 சதவீத இழப்பையும், தொழிற்சாலைகள் 40 சதவீத இழப்பையும் பகிர்ந்து கொள்ளும். இதுதொடர்பான இறுதி முடிவு முதல்வர் கருணாநிதி, நிதியமைச்சர் அன்பழகன் ஆகியோருடன் கலந்து பேசி எடுக்கப்படும் என்றார் வீராசாமி.

2 comments:

வால்பையன் said...

பற்றாக்குறை மண்ணாங்கட்டி எல்லாம் கிடையாது.
இது திட்டமிட்டு செய்யப்படும் சதி.
தேவைக்கேற்ற மின்சாரம் தயாரிக்கிறோம். தயாரிக்கவும் முடியும்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தது நினைவில்லையா.

காசு கொடுத்து வாங்கி இலவசமாக கொடுக்க நமது அரசு முட்டாள்கள் கிடையாது.
அது ஓட்டுக்காக
இது நோட்டுக்காக

வால்பையன்

Expatguru said...

வால்பையன் சொன்னது 100க்கு 100 உண்மை. இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் அணுசக்தி வெறும் 4 சதவிகிதம் தான்.

அது இருக்கட்டும், இந்தியாவுக்கு இப்போதைய அவசர தேவை அணு ஒப்பந்தத்தை விட விலைவாசியை கட்டுப்படுத்துவது தான். சாதாரண மக்கள் பயன்படுத்தும் பஸ்ஸிலிருந்து பால், அரிசி, பருப்பு, Gas என்று எல்லா விலைகளும் ஏறி விட்டன. அரசு முதலில் இதை கட்டுக்குள் கொண்டு வரட்டும்.

Popular Posts