Sunday, August 17, 2008

விற்பனை தொலைபேசி அழைப்புக்கள் தொந்தரவா? இல்லையா?

விற்பனை தொலைபேசி அழைப்புக்கள் தொந்தரவா? இல்லையா?

பொதுவாக தற்போது இது போன்ற மார்கெட்டிங் தொலைபேசி அழைப்புக்கள் நமக்கு வரக்கூடாது என்றால் அதை தவிர்க்க தொலைப்பேசிக் கம்பெனிகளில் தெரிவித்து அதை வராமல் செய்துவிடலாம்.

ஆனால் அதை விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே செய்து இருப்பார்கள். ஏதோ முக்கியமான வேலையாக இருப்போம் அப்போது அழைப்புவரும் அதில் சென்னை எண்ணில் இருந்து யாரோ கூப்பிடுவார்கள். எடுத்து ஹலோ என்றால் ரேடியோ மிர்ச்சி RJ (அவங்க பேரேன்ன சுசியா?) தனது கட்டைக்குரலில் குசேலன் பாட்டு டவுன்லோடு செய்யவேண்டுமா அல்லது ரிங்டோனாக வைக்கவேண்டுமா

எனக்கேட்க ஆரம்பித்துவிடுவார்... அடச்சே இருக்கும் தண்டனை போதாதா இது வேறயா என்றுக்கேட்டுவிட்டு கடுப்போடு கட் செய்வேன்.

சில சமயம் பம்பாய் மற்றும் டெல்லி எண்ணில் இருந்து கூட இப்படி போன் கால் வரும்.

அப்போது மார்க்கெட்டிங் அழைப்புக்கள் ஆரம்பம் ஆகாமல் இருந்த காலம்... ஒரு சமயம் எனக்கு ஒரு வடநாட்டு மொபைல் தொலைபேசி எண்ணிலுருந்து அழைப்பு வந்தது.

நானும் சாதாரணமாக எடுத்து ஹலோ கூறினேன். அதற்கு பதில் வந்த குரலைக்கேட்டவுடன் எனக்கு தூக்கி வாரிப் போட்டது.

காரணம் நல்ல பழக்கமான குரல் ஹிந்தியில் மைம் அடல் பிஹாரி வாஜ்பாயி பாத் கராஹூங் (நான் அடல் பிஹாரி வாஜ்பாயி பேசுகிறேன்) என்று கூறி சற்று இடைவேளி விட்டது.

நான் இங்கே சேரில் இருந்து குதித்து இறங்கி மரியாதைக்காக சேரின் மீதே ஏறி நின்று கொண்டு மிகவும் தாழ்ந்த குரலில் பாத் கிஜியே ஜி ( பேசுங்கள் ஐயா) என்றேன்.

அடுத்த எனது முகத்தில் வழிந்த அசடை கழுவ இரண்டு பக்கேட் தண்ணீர் செலவானது. அப்போதைய பிரதமர் வாஜ்பேயி குரலை டேப் செய்து போட்டு ஓட்டுக் கேட்டுக்கொண்டிருந்தனர் பாஜக கட்சியினர்.

மேலும் நானும் கணினியில் கையை வைத்துக்கொண்டு சும்மா இருப்பதில்லை இணையப்பக்கங்களில் இறைந்து கிடக்கும் போரம் (Forum) மற்றும் sign in கேட்கும் அனைத்திலும் சென்று யூசர் நேம் பாஸ்வேர்டு மற்றும் ஈ மெயில் முகவரி மொபைல் எண் கொடுத்துவிடுவேன்.

இதனால் சற்று ஸ்பேம் மெயில் வரும் அதனால் பெரிய தொந்தரவு எதுவுமில்லையென்றாலும் மொபைல் எண் கொடுப்பதால் சில இந்திய வியாபார நிறுவனங்களின் மார்க்கெட்டிங் டிபார்ட்மெண்டில் இருந்து உடனே மொபைலில் கூப்பிட்டுவிடுவார்கள்.

அவர்கள் பேசும் பீட்டர் ஆங்கலத்திற்கு yes yes என்று கூறிவிட்டு please send me all details in e-mail என்று கூறி விட்டு ஈமெயில் முகவரி கொடுத்து விட்டு எஸ்கேப் ஆகி விடுவேன்.

ஏன் சிலசமயம் வெளிநாட்டு அழைப்புக்கள் கூட வந்துள்ளன... அதற்கும் மேற்க்கண்ட வழியை உபயோகித்துவிடுவேன்.

சரி இதேல்லாம் இப்போ எதற்கு என்று கேட்கிறீர்களா... இப்போது விசயத்திற்கு வருகிறேன்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் திடிரேன மின்சாரம் தடைபட்டதால் தமிழ்மண  போதை சற்று தெளிந்து படுக்கையில் மல்லாக்க படுத்துக்கொண்டு (வால்பையன் பாணியில்) யோசித்துக்கொண்டிருந்தேன்.

அப்போது வழக்கம் போல் ஒரு மொபைல் போனில் இருந்து ஒரு அழைப்பு வந்தது.

எடுத்தவுடன் நீங்கள் எங்களுடைய டேஸ் டேஸ் வெப்சைட்டில் பதிவு செய்துள்ளீர்கள் ஆகையால் உங்களுக்கு எங்களிடம் வாங்கும் பொருள்களுக்கு 5 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி உள்ளது என்று ஆங்கிலத்தில் பீட்டர் விட்டார் ஒருவர்.

எனக்கு ஒரு பழக்கம் ஆங்கிலத்தில் யாராவது தமிழ்நாட்டுக்காரர் பீட்டர் விட்டால் அவர்களிடம் நான் ஹிந்தியில் பேசி அவர்களை திக்குமுக்காட வைப்பது வழக்கம். (ஹிந்தியில் நான் ஒன்றும் புலமை பெற்றவனல்ல இருந்தாலும் தமிழ்நாட்டு மார்வாடிகள் பேசும் தமிழுக்கு நான் பேசும் ஹிந்தி எவ்வளவோ மேல்)

அதன்படி நான் இந்தியில் நீங்கள் எந்த ஊரில் இருந்து பேசுகிறீர்கள்? மற்றும் என்ன பொருள்கள் மார்க்கேட் செய்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவரும் நான் சென்னையில் இருந்து பேசுவதாகவும் தங்களது சைட்டில் இருக்கும் அனைத்துப்பொருட்களும் இருப்பதாகவும் என்று ஹிந்தியில் பதில் கூறினார்.

ஆஹா வந்து விட்டார் வழிக்கு என்று நினைத்துக்கொண்டு எனது வழக்கப்படி உங்களது அனைத்து விவரங்களையிம் ஈ மெயிலில் அனுப்புங்கள் நான் பார்க்கிறேன் என்றுக்கூறா உடனே மெயில் முகவரி கொடுங்கள் எனக்கேட்க நானும் எனது முகவரியை a for apple போல s for sun c for calcutta என்றுக்கூற அங்கும் மிகவும் அக்கறையாக ஒவ்வொன்றாக கேட்டுக்குறித்துகொண்டார்.

அடுத்து வணக்கம் சொல்லி போனை ஆப் செய்ய நினைக்கும் போது வந்து விழுந்தது ஒரு கேள்வி... நீங்கள் சைனா போன் வாங்க விரும்பிகிறீர்களா? என்று நமக்குத்தான் சைனாப்போன் ஆசைக்கொழுந்து விட்டு எரிந்துக்கொண்டிருந்தே...

ஆனால் எனது இந்தப்பதிவில் வந்த பின்னுட்டங்களின்படி எனது காது எரிந்துவிடும் பயம் ஏற்பட்டு இருந்தாலும்... எதற்கும் கூறி வைப்போமே என்று ஆமாம் என்றேன்.

அப்போதுதான் எனக்குள் ஒரு பல்ப் எரிந்தது... இந்த சைனாப்போன் விசயம் எனது பதிவில் வெளியிட்டதைத் தவிர வேறு யாருக்கும் தெரியாதே என்று...

உடனே யார் பேசுவது பரிசலாஆஆஆஆஆஆஆ ????  எனக்கேட்டேன். எதிர்ப்பக்கம் உடன் ஒர் வெடிச்சிரிப்ப்ப்ப்பு கிளம்பியது.... ஆகா கிளம்ப்ப்ட்டாங்க்கய்யாஅ கிளம்பிட்டங்க என நினைத்துக்கொண்டேன்.

ஆமாம் நான் ஏற்கனேவே கூறியிருந்தும் எப்படி இப்படி ஏமாந்தீர்கள் எனக்கேட்டார்.
அதற்குத்தான் மேலே கூறியவற்றைக்கூறி இது போல அழைப்பு வருவது எனக்கு வழக்கம்தான் என்று கூறினேன். பிறகு பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டு சிறிது கடலைப்போட்டுவிட்டு போனை வைத்தேன்.

இந்தப்பதிவே அடுத்து பரிசல் இந்த  பேச்சினை உருபெருக்கம் செய்து தனது பதிவில் இடுவார் என்பதால் நான் முந்திக்கொண்டேன்



No comments:

Popular Posts