ஈரோடு பதிவர்சந்திப்பு - வால்பையன் வருத்தம்...
இன்று ஒரு வழியாக ஈரோட்டில் ஒரு பதிவர் சந்திப்பு நல்லமுறையில் நடந்து
முடிந்தது.
சுமார் ஒரு வருடமாக திட்டமிடப்பட்டு பல முறை தேதி குறிக்கப்பட்டு பிறகு நாள்
குறிக்கப்படாமல் காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.
இன்று திங்கள்கிழமை மதியம் சுமார் 12.45 மணிக்கு முடிவு செய்யப்பட்டு மூத்த பதிவர் வால்பையன் அவர்கள் அலுவலகத்தில் இனிதே நடைபெற்றது.
கூடுதுறையாகிய எனது தலைமையில் உள்ளூர் பதிவர்கள் 10 பேரும், வால்பையன் அவர்கள் தொலைபேசியில் அழைக்கப்பட்டு எட்டு பதிவர்களும், பாஸ் கார்த்திக் அவரது பங்கிற்கு ஈரோடு வாழ் பதிவர்கள் ஒன்பது பேரும் கலந்து கொண்டனர்.
அவரவர் அறிமுகத்திற்கு பிறகு அமைதியாக இருந்து பாஸ் கார்த்திக் அவர்கள் நீங்கள்தானே கூடுதுறை என்று சந்தோசத்துடன் எகிறி வந்து அறிமுகப்படுத்திக்கொண்டார்.
சந்திப்பில் பொதுவான விசயங்கள் அலசப்பட்டன... கூகுல் குரோம் மற்றும் அட்டவணைப் பதிவுகள் பேசப்பட்டது. பிறகு பேச்சு கம்மாடிட்டி டிரேடிங் பக்கம் திரும்பியது. நானும் இன்று காலை மேற்படி மார்க்கெட் பற்றிய ஆர்ட்டிகள் ஒன்று படித்தேன் அதில் தங்கம் விலை அடுத்த ஆண்டு டிசம்பர் வரை இப்போது இருக்கும் விலையை விட இறங்கியே இருக்கும் என்று எழுதியுள்ளது என்று கூறினேன்
வால்பையனும் ஆஹா பரவாயில்லையே எனக்கூறி யார் எந்த வல்லுனர் எழுதியுள்ளார் ஆவலுடன் கேட்டார். வல்லுனர் ஒருவரும் இல்லை ஒரு குருப்பெயர்ச்சி பலன் புத்தகத்தில்தான் அப்படிக்கூறியுள்ளனர் எனக்கூறினேன். வால்பையன் காற்று போன பலூன் ஆனார்.
மேலும் அவர் தனது தம்பிக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட விசயத்தை நம்மிடம் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார்.
பாஸ் கார்த்திக் அவர்கள் சாப்பிட்டு விட்டுதான் போகவேண்டுன் என மிகவும் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதற்கிணங்க அனைவரும் ஈரோடு ஆக்ஸ்போர்டு மங்களம் உணவகம் சென்றோம்.
கார்த்திக் அவர்கள் அசைவம் சாப்பிடுவோம் எனக்கேட்டதற்கு இன்று திங்கள்கிழமை நாம் அசைவம் சாப்பிடமாட்டோம் எனக்கூறியதற்கு மிகவும் ஆச்சர்யப்பட்டார்.
திங்கள்கிழமை ஏன் சாப்பிடுவதில்லை என விளக்கம் கேட்டார். நாம் கார்த்திகை மாதம் சாமி கும்பிடுபவர்கள் ஆகவே திங்கள் அசைவம் சாப்பிடுவதில்லை எனக்கூறினேன்.
வேறு எதாவது வெண்குழல் வத்தி அல்லது சமத்துவபுரம் என இழுக்க... மன்னிக்கவும் எனக்கு பழக்கமில்லை எனக்கூற வால்பையன் மிகவும் வருத்தமடைந்தார். சென்னை வலைப்பதிவர் சந்திப்பில் எல்லாம் எப்படி மிதந்தோம் இப்போது நம்மூர் பதிவர் சந்திப்பு இப்படி முழுக்க முழுக்க சைவமாக அமைந்துவிட்டதே என மிக்க வருத்தம் கொண்டார்.
சாப்பிட்டுவிட்டு வெளியே வந்ததும் பல பதிவர்களின் எச்சரிக்கையையும் மீறி நான் சைனா போன் வாங்கிவிட்டதைக்கூறி அதை எடுத்துக்காட்டினேன். மேலும் அதனுடைய பிளஸ் பாயிண்டுகளை மட்டும் எடுத்துக்கூறினேன். (யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டும்).
அதிலிருந்து வால்பையன் என்னை ஒருபுகைப்படம் எடுத்து இது வால்பையன் எடுத்தது எனக்கூறி வெளியிடுங்கள் கட்டளையிட்டார். எனது படம் என்றால் கூடுதுறைதான் வரும் எனக்கூறி மறுத்துவிட்டேன்.
அத்துடன் சந்திப்பு இனிதே முடிவுற்றது.
டிஸ்கி: 10 +8 +9 பேர் கலந்து கொண்டனர் என்று எழுதியது எல்லாம் சும்மா பில்டப் நாம் மூன்றுபேர்தான் கலந்துகொண்டோம். ஆனால் அத்தனை பேர் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும்.... ம் .ம். ம் ... பார்ப்போம் வருங்காலத்தில்